அனைவரின் பங்களிப்புடன் கூடிய நிதியமொன்றை நிறுவவும், நிதியத்தை முகாமைத்துவம் செய்ய அமைச்சரவை அங்கீகாரத்துடன் கூடிய அரச மற்றும் தனியார் துறைகளைக் கொண்ட கூட்டு முகாமைத்துவக் குழுவை நியமிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுலகத்தில் தனியார் துறை முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலோட்டமாகத் தெரிவதை விட, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திறைசேரியின் நிதிகளால் மாத்திரம் அந்த சேதத்திற்கு முகங்கொடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்காக பல வழிகளில் நிதி திரட்ட முடியும் என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், சர்வதேச அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்களிலிருந்தும் அதற்கான நிதியை திரட்ட முடியும் என்றும் இந்தப் பணிகள் நியமிக்கப்படும் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமை காரணமாக, வீடுகள், வயல்கள், பயிர்நிலங்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், அரச கட்டடங்கள், பாடசாலைகள் மற்றும் சில இடங்களில் மின் கம்பங்கள் கூட சரிந்து விழுந்துள்ளதாகவும், மண்சரிவுகளால் சேதமாகிய பாதைக் கட்டமைப்பை பாரிய அளவில் புனர்நிரமாணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அனர்த்தத்தினால் ஒவ்வொரு துறைக்கும் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மீள் கட்டமைப்புக்குத் தேவையான நிதிகள் தொடர்பான ஆவணத்தைத் தயாரிப்பது குறித்து உலக வங்கியுடன் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதுடன், Global Rapid post-disaster Damage Estimation (GRADE) தயாரிக்கும் பொறுப்பு ஏற்கனவே உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Post a Comment