முப்படை பாதுகாப்புத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கணினி அவசர புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனர்த்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நலன்களுக்காகவும் சேவைகளையும் விநியோகங்களையும் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், சில நபர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உண்மைக்குப் புறம்பாக, உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு காணப்படுவதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
பொதுமக்களைப் பீதியடையச் செய்யும் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கைகளை வெளியிடுவதும், பிரசுரிப்பதும் மிகவும் தவறான செயல் என்றும், தவறான தகவல்களைச் சமூகமயமாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இடைத் தங்கல் முகாம்கள் உட்பட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின்படி பாலியல் வன்புணர்வுகள், அத்துமீறல்கள், திருட்டு மற்றும் கொள்ளைச் செயல்களில் ஈடுபடும் எவருக்கும் எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் அரசாங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரும் கௌரவமான பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment