அரசாங்கத்தை குறை சொல்வதற்கு இது நேரமில்லை. எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சியினர் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு யோசனைகளை தெரிவியுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செயற்பாட்டில், நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே இன்றுள்ள பொறுப்பாகும். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்,இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை,சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, நிதித்திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே,அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது அயல்நாடான இந்தியாவை பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். எமக்கு பொருளாதார நெருக்கடிகள் வரும்போதெல்லாம் உதவி செய்த இந்தியா, இப்போது இந்த இயற்கை அனர்த்தத்திலும் முதலாவதாக உதவி செய்துள்ளது. அந்த வகையில் இந்தியப் பிரதமர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், இந்திய மக்கள் என அனைவருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அவரது தரப்பினருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இரவு,பகல் எனப் பாராது இந்த அனர்த்த சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் அவர்கள் செயற்பட்டதைக் காண முடிந்தது. நித்திரையைக் கூட பொருட்படுத்தாமல், நாட்டு மக்களை பற்றி சிந்தித்துச் செயற்படும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

Post a Comment