கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், இந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு உள்ளிட்ட குழுவினரிடம் ஒப்படைத்தது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீபின் பணிப்புரையின் பேரில் பாகிஸ்தான் இராணுவத்தின் தேடல் மற்றும் மீட்புப் பிரிவைச் சேர்ந்த 47 உறுப்பினர்களும், 6.5 மெட்ரிக் டொன் அத்தியாவசிய உபகரணங்களும் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கூடாரங்கள், போர்வைகள், லைஃப் ஜெக்கெட்டுகள், படகுகள், நீர் பம்புகள், விளக்குகள், பாய்கள், நுளம்பு வலைகள், குழந்தைகளுக்கான பால்மா, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் ஆகியவை இந்த நிவாரணப் பொருட்களில் அடங்குகின்றன.
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஹெலிகப்டர்கள் ஏற்கனவே இலங்கையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு தனது மனிதாபிமான உதவிகளை விரிவுபடுத்தியுள்ளது.
மனிதாபிமான உதவி மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு இயன்ற அனைத்து ஆதரவையும் தொடர்ந்து வழங்கும் என்று பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Post a Comment