Ads (728x90)

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3545 மத்திய நிலையங்களில் இன்று ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.

இப்பரீட்சை இன்று 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் 33 பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் 531 ஒருங்கிணைப்பு நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்காக பரீட்சை நிலையங்களின் கண்காணிப்பாளர்கள் உட்பட 30,000 பரீட்சை மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக ரத்மலான, தங்கல்லை, மாத்தறை, சிலாபம், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, கைதடி நபீர் விசேட பாடசாலை, யாழ்ப்பாணம், துன்ஹிந்த வித்தியாலயம் போன்ற இடங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை சாதாரணதரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

சகல பரீட்சார்த்திகளுக்கும் தற்போது அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தேர்வு நிலையத்திற்கு வருவது கட்டாயமாகும். மேலும் மொபைல் போன்கள், புளூடூத் சாதனங்கள் போன்றவற்றை தேர்வு மண்டபத்திற்குள் எடுத்துச் செல்வதும் தடை செய்ப்பட்டுள்ளது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget