Ads (728x90)

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று பிற்பகல் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். 

நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற "டுடூ" மற்றும் "மோதர நிபுண" ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது.

”சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது. அதைச் செய்ய வேண்டும். 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்" என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி இவர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர்.

இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள், சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 - 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவதினத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே.

இக்கொலைக்கு உதவியமைக்காகச் இச்சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை. மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார்.

வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget