2025 ஆம் ஆண்டில் மட்டும் மத்தள விமான நிலையம் ஊடாக 140,614 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அத்துடன் இந்த ஆண்டில் 703 சர்வதேச விமானங்கள் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் இந்த விமான நிலையத்தின் மீது செலுத்திய விசேட கவனமே பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அதிகரிப்புக்கும், இந்த வெற்றிக்குமான பிரதான காரணங்களாகும்.
முன்னதாக, வனவிலங்கு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பல விமான நிறுவனங்கள் மத்தலவிற்கு வருவதற்குத் தயக்கம் காட்டின. எனினும் புதிய அரசாங்கம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டதை அடுத்து, சர்வதேச விமானங்களின் வருகை அதிகரித்துள்ளது.
2025 இல் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளை இணைக்கும் வகையில் பல முன்னணி விமான நிறுவனங்கள் மத்தளவிற்கான சேவைகளை நடத்தியுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த மாற்றீடாக மத்தள விமான நிலையம் உருவெடுத்துள்ளது. மேலும் இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு இலகுவாகச் செல்ல முடிவதால், இது நாட்டின் சுற்றுலாத்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோடிக்கணக்கான பொதுப் பணம் செலவிடப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த மத்தள விமான நிலையம், தற்போது தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பயனுள்ள மையமாக மாறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment