ஜனாதிபதியின் அரசியல் திறன், மனிதாபிமான பண்பினை இன்று முழு உலகும் பாராட்டுகிறது. இது நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும். இந்த நாட்டின் பெண்கள் ஜனாதிபதியை தன் மகனாகவும், சகோதரராகவும் பார்க்கிறார்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ”பெண்கள் நாம் ஓர் அணியில் - அவள் உயரும்போது உயரும் நாடு” எனும் தொனிப்பொருளின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பெண்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக நாம் முன்னிற்போம். அதற்காகவே நாம் அரசியலில் ஈடுபடுகின்றோம். இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த அர்ப்பணிப்புக்கு உரிய மதிப்பினை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த நாட்டைத் கட்டியெழுப்பும் பணியில் பெண்களாகிய உங்களின் பங்களிப்பு எமக்கு மிகவும் பெறுமதிமிக்கதாகும்.பெண்கள் அரசியலில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதுடன், இந்நாட்டின் பெண்கள் எந்தத் துறையில் எங்கே இருக்கிறார்களோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நாம் அரசியல் செய்கிறோம்.
வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னுக்குக் கொண்டு வருவதற்காக நாம் இங்கே எதனையும் செய்யவில்லை. எமது பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமே நாம் இந்த அரசியலைச் செய்கிறோம்.மலையக சமூகத்தின் பெண்கள் இன்றும் எம்முடன் உள்ளார்கள். ஜனாதிபதி அண்மையில் நுவரெலியாவுக்கு சென்ற போது பெண்கள் ஜனாதிபதியுடன் இயல்பாக உரையாடினார்கள். கரத்தை பற்றி தமக்கு சமமாக நிற்க வைத்தார்கள். நாங்கள் இந்த நாட்டில் அனைத்து பெண்களுக்கும் சம அந்தஸ்த்தை கொடுத்துள்ளோம்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை பற்றி காலம் காலமாக பேசப்பட்டது, ஆனால் நாங்கள் எவரும் எதிர்பார்க்காத வகையில் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கினோம். இந்த சம்பள உயர்வு மலையக சமூகத்தின் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றார்.



Post a Comment