2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் குறித்த தகவல் பற்றிய விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இலங்கையின் ஒட்டுமொத்த கணனி அறிவு வீதம் 34.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ஆனால், ஸ்மார்ட் கைபேசிகளின் பயன்பாட்டையும் உள்ளடக்கிய டிஜிட்டல் அறிவு வீதமானது கணனி அறிவை விட இரண்டு மடங்காக உயர்ந்து 67.6 சதவீதமாக காணப்படுகிறது.
இது இலங்கையர்களிடையே கணனிகளை விட கையடக்கத் தொலைபேசிகள் வழி சார்ந்த டிஜிட்டல் பயன்பாடு அதிகமாக இருப்பதை காட்டுகிறது.
நகர்ப்புறங்களில் வசிப்பவர்களிடையே கணனி அறிவு 47.0 சதவீதமாகவும், டிஜிட்டல் அறிவு 76.8 சதவீதமாகவும் உயர்ந்து காணப்படுகிறது.
கிராமப்புறங்களில் கணனி அறிவு 33.0 சதவீதமாகவும், டிஜிட்டல் அறிவு 66.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கு மாறாக, தோட்டப்புறங்களில் கணனி அறிவு மிகக் குறைவாக 14.9 சதவீதமாகவும், டிஜிட்டல் அறிவு 50.2 சதவீதமாகவும் உள்ளது.
கொழும்பு மாவட்டம் இலங்கையிலேயே மிக உயர்ந்த கணனி அறிவு வீதத்தையும் (51.0 வீதம்), மிக உயர்ந்த டிஜிட்டல் அறிவு வீதத்தையும் (78.7 வீதம்) கொண்டு முதலிடத்தில் உள்ளது.
கணனி அறிவில் கம்பஹா (42.7 வீதம்) மற்றும் கண்டி (38.5 வீதம்) மாவட்டங்கள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுகின்றன.
கணனி அறிவு மிகக் குறைவாகக் காணப்படும் மாவட்டமாக மன்னார் (19.5 வீதம்) பதிவாகியுள்ளது.
வயது அடிப்படையில் கணனி மற்றும் டிஜிட்டல் அறிவு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டுகின்றது.
20-24 வயதுப் பிரிவினர் இலங்கையில் அதிகூடிய கணனி அறிவு வீதத்தை (65.5 வீதம்) கொண்டுள்ளனர்.
ஆனால், டிஜிட்டல் அறிவைப் பொறுத்தவரை 15-19 வயதுப் பிரிவினர் 97.0 சதவீதம் என்ற மிக உயர்ந்த புள்ளியைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த அறிவு வீதங்கள் குறைகின்றன. குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கணனி அறிவு 3.7 சதவீதமாகவும், டிஜிட்டல் அறிவு 15.5 சதவீதமாகவும் மிகக் குறைவாக உள்ளது.
பாடசாலை செல்லும் பிள்ளைகளில், 10-14 வயதுப் பிரிவினரிடையே டிஜிட்டல் அறிவு 88.1 சதவீதமாகவும், கணனி அறிவு 41.2 சதவீதமாகவும் காணப்படுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இலங்கையில் கணனி அறிவை விட டிஜிட்டல் அறிவு அனைத்துத் தரப்பினரிடையேயும், குறிப்பாக இளைஞர்களிடையே மிக வேகமாக வளர்ந்து வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Post a Comment