Ads (728x90)

நுவரெலியா - ராகலை பெருந்தோட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், அங்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 3 கட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டார். 

அங்கு பயனாளிகளுடன் கலந்துரையாடிய அவர். இந்தச் சந்திப்பின் போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்களைச் சந்தித்ததில் தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மலையகப் பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களுக்காக 50,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் விரைவில் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.

நுவரெலியா சீதா எலியாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். புனித ராமாயணத்துடன் தொடர்புடைய இந்த ஆலயம், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆழமான கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளின் அடையாளமாகத் திகழ்கிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து, அசோக வனத்தில் அன்னை சீதா தேவியை அனுமன் சந்தித்த இடமாகக் கருதப்படும் பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோயிலுக்கும் சென்ற துணை ஜனாதிபதி, அங்குள்ள அனுமனின் புனித பாதச் சுவடுகளை வணங்கி மரியாதை செலுத்தினார்.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget