வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்குரிய பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இது எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது.
குறிப்பாக, நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் இந்த இறங்குதுறையில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதில் பெரும் இடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அதற்கான நிரந்தரத் தீர்வும் தற்போது எட்டப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவகப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது. இப்பகுதிகளின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த இறங்குதுறை புனரமைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நெடுந்தீவு இறங்குதுறையையும் புனரமைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதற்காக உழைத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் 2027 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளது.



Post a Comment