Ads (728x90)

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் குறித்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கோரியுள்ளது. உலகளாவிய எரிபொருள் விலை மாற்றங்கள் காரணமாக இந்த திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் (பிரைவட்) லிமிட்டட் நிறுவனம் 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்தி குறித்த திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை கடந்த 2026 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி ஒப்புதலுக்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. 

இந்தச் செலவு மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ள முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொது கலந்தாய்வை நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆலோசனை பத்திரத்தில் பின்வரும் அம்சங்கள் அடங்கியுள்ளன.

1. மே மாதம் 10ஆம் திகதி முதல் மின்சார நுகர்வோருக்கு ரூபா 15 பில்லியன் அரச மானியம் வழங்குதல்

2. அரச மானியத்தின் அடிப்படையில், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட 95 சதவீத மின்சார நுகர்வோருக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டாம் எனும் பரிந்துரைகள்

3. பொதுத் தேவைகள், அரச நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் ஆகிய பிரிவுகளில், மாதாந்த பாவனை 180 அலகுகளுக்கும் குறைவாக உள்ள துணைப் பிரிவுகளுக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டாம் எனப் பரிந்துரைகள்

4. தொழில்துறைப் பிரிவின் முதல் துணைப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் எனும் பரிந்துரைகள்

5. நிலக்கரி நிலைமைகள் தொடர்பாக ஏற்படும் மேலதிக செலவுகள் மின்சாரக் கட்டணங்களில் சேர்க்கப்படாமல் இருப்பதை மேலும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்

அதிகரித்த மின்சார உற்பத்திச் செலவுகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் (பிரைவட்) லிமிட்டட் நிறுவனத்திற்கு ரூ. 38 பில்லியன் பற்றாக்குறை ஏற்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது. 

நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக மின்சாரம் தயாரிப்பதில் ஏற்படும் கூடுதல் செலவுகள் இந்தப் பற்றாக்குறையில் சேர்க்கப்படவில்லை. மொத்தப் பற்றாக்குறையில் ரூபா 15 பில்லியன் தொகையை மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதை திறைசேரி ஆணைகுழுவிற்கு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக ஆணைகுழுவால் தயாரிக்கப்பட்ட ஆலோசனை பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் ஆலோசனை பத்திரத்தைப் பார்த்து, கருத்துக்களையும், பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கலாம்.

எழுத்துப்பூர்வமான கருத்துக்களும், ஆலோசனைகளும் 2026 மே மாதம் 06 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வாய்மொழிமூல கருத்துக்கேட்டல் அமர்வு 2026 மே மாதம் 06 ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தபால், மின்னஞ்சல், வட்ஸ்அப் அல்லது தொலைநகல் மூலம் சமர்ப்பிக்கலாம்.

வாய்மொழிக் கருத்துகளைத் தெரிவிக்க முன் பதிவு அவசியம். 076 427 1030 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, எதிர்கால மின்சார கட்டணங்கள் குறித்த இறுதி முடிவை 2026 மே மாதம் 09 ஆம் திகதி அன்று அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2026 சிறப்பு மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்கலாம்.

தபால் மூலம்: 2026 ஆம் ஆண்டு விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது கருத்து கேட்டல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,

சென் மைக்கல் வீதி

கொழும்பு 3

மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk

தொலைநகல்: 0112392641

வட்ஸ்அப்: 0764271030

 

Post a Comment

Recent News

Recent Posts Widget