தம்மரத்ன மற்றும் புண்ணியரத்ன ஆகிய பெயர்களால் அறியப்படும் இந்த இரு தேரர்களும் தாய்லாந்தில் தங்கியிருந்தவாறு இந்த போதைப்பொருள் வலையமைப்பை முன்னெடுத்து வந்துள்ளமை இதுவரையிலான விசாரணையில் தெரியவந்துள்ளதாக போதைப்பொருள் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவியோடு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரை அணுகி குறித்த இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
22 இளம் தேரர்களையும் தாய்லாந்துக்கு அனுப்புவதற்கு அனைத்து வசதிகளையும் முன்னெடுத்ததாகக் கூறப்படும் அங்குணகொல பெலஸ்ஸ அமிதானந்த தேரர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இவரோடு சந்திரகுமார் எனும் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மரத்ன மற்றும் புண்ணியரத்ன ஆகிய பெயர்களால் அறியப்படும் இரு தேரர்களும் அமிதானந்த எனும் தேரரோடு தொடர்புபட்டு இந்த வலையமைப்பை முன்னெடுத்துச் செல்வதும், அமிதானந்த தேரர் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை சந்திரகுமார் எனும் நபருக்குக் கொடுக்கின்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த 22 பேருக்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் போதைப்பொருள் தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் இந்த போதைப்பொருட்களைக் கடத்தி வந்ததாகக் கூறப்படும் 12 தேரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment