Ads (728x90)


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் இன்று அவரது வீடு சோதனையிடப்பட்டபோது, 221 T56 ரகத் தோட்டாக்கள், 2 T56 ரக மெகசின்கள், 7.2 ரகத் தோட்டாக்கள் 31, 0.2 ரகத் தோட்டாக்கள் 103 மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர். 

இதனடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் முன்னெடுத்த மேலதிக சோதனைகளின் போது, அங்கு பதிவு செய்யப்பட்ட 04 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு ஷொட்கன்களும், இரண்டு 9 மி.மீ. துப்பாக்கிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு துப்பாக்கி சந்தன கத்ரியாராச்சியின் பெயரிலும், மற்றைய 03 துப்பாக்கிகள் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விஜய குமாரதுங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை மக்கள் கட்சியின் மூலம் அரசியலில் நுழைந்த சந்தன கத்ரியாரச்சி, பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கெஸ்பேவ தேர்தல் அமைப்பாளராகவும், பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget