Ads (728x90)

போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் பிரார்த்தனை தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்றும், அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள தேசிய படையினர் நினைவிடத்திற்கு முன்பாக  நேற்று நடைபெற்ற 17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நாட்டின் இரண்டு கோடி மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக போர் வீரர்கள் ஒரு சிறந்த பணியைச் செய்துள்ளனர் என்றும், அந்தப் பணிக்காக அவர்கள் அனைவருக்கும் தனது உத்தம மரியாதையைச் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில், நாட்டை விடுவிப்பதைப் போன்றே எமது நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் நோக்கமும் உங்களுக்கு இருந்தது. அதேபோல, முற்றிலும் நீதியான, சட்டத்தை மதிக்கின்ற ஒரு நாடு உங்களுக்குள் இருந்தது. உலகை வெல்லும் ஒரு நாடு என்பது அவர்களின் மரணத்தருணப் பிரார்த்தனையாக இருந்தது. 

அவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தது அந்தப் பிரார்த்தனைகளுடன்தான். இந்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக நின்று, அவர்கள் பிரார்த்தனை செய்த அந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றும், அவர்களின் பிரார்த்தனைகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டோம் என்றும் நான் உறுதியளிக்கிறேன். 

இந்தக் கடினமான பயணத்தின் இறுதி நோக்கம் இந்நாட்டை ஒரு பிரகாசமான, முன்மாதிரியான நாடாக மாற்றுவதாகும். போர் வீரர்களின் பிரார்த்தனையும் அதுவே ஆகும். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. நாம் சர்வதேச அரங்கில் இலங்கையின் பிம்பத்தை உயர்த்தி வருகிறோம். எமது நாட்டின் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை மதிக்கின்ற ஒரு நாடாக இதனை மாற்றியுள்ளோம். 

நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த அனைவரதும் பிரார்த்தனைகளை எமது தோள்களில் சுமந்து கொண்டு, ஒரு முன்மாதிரியான நாட்டைத் கட்டியெழுப்பும் உறுதியான பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதுவே அவர்களின் பிரார்த்தனை என நான் கருதுகிறேன்.

தனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாதிருப்பதே தமது அரசாங்கத்தின் இறுதி இலக்கு என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
மனித சடலங்களாலோ, இரத்த வெள்ளத்தினாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றும், அமைதியால் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget