Ads (728x90)

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது. நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும். இந்த பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாசாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதையும், பிரதேச கலாசார மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பரவலாக்கி அவற்றை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையானதொரு நூலகமாக இதன் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் நகரபிதா ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடுகை செய்யப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோருடன், பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget