Ads (728x90)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது, மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது. 

குறித்தப் பிரச்சினை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். 

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10,900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட 2,306 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இந்த ஆண்டு 8,625 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்பட்டது. 

கிராமியப் பாலங்கள், கிராமிய வீதிகள், வீட்டுத்திட்ட வேலைகள், நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், எனப் நிர்வாக சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. 

டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடைமுறைகள் பற்றியும், இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் இரண்டு குளங்களை இணைத்து முன்னெடுக்கப்படவுள்ள முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அபிவிருத்தி பணியை ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget