Ads (728x90)

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டு மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிப்பதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைபாடுகளை நீக்கி, மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் விபரம்:

கொழும்பு: வைத்தியர் நஜித் இந்திக்க

கம்பஹா: தர்மப்பிரிய விஜேசிங்க

அனுராதபுரம்: சுசந்த குமார நவரத்ன

பதுளை: ரவீந்திர பண்டார

மட்டக்களப்பு: கந்தசாமி பிரபு

திகாமடுல்ல (அம்பாறை): எம்.எம். சுகத் ரத்நாயக்க

காலி: வைத்தியர் நிஷாந்த சமரவீர

ஹம்பாந்தோட்டை: வைத்தியர் சந்தருவன் மதரசிங்க

யாழ்ப்பாணம்: வைத்தியர் எஸ். ஸ்ரீ பவனந்தராஜா

திருகோணமலை: ரொஷான் அக்மீமன

வன்னி: செல்வதம்பி திலகநாதன்

கேகாலை: ஆர்.எம். சமந்த ரணசிங்க

களுத்துறை: வைத்தியர் நிஹால் அபேசிங்க

கண்டி: தனுர திசாநாயக்க

குருணாகல்: வைத்தியர் ஜகத் குணவர்தன

மாத்தளை: செல்வி. தீப்தி நிரஞ்சனி வசலாகே

மாத்தறை: லால் பிரேமநாத்

மொனராகலை: எச்.எம். சரத் குமார

நுவரெலியா: டி. மஞ்சுள சுரவீரஆராச்சி

பொலன்னறுவை: பத்மசிறி பண்டார

புத்தளம்: கயான் ஜனக்க

இரத்தினபுரி: வைத்தியர் ஜனக சேனாரத்ன

இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்குப் பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, மக்கள் பங்களிப்புடன் மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளை இனங்கண்டு அவற்றை வகைப்படுத்துதல், அந்தத் தேவைகளை தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் இணைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மத்திய, மாகாண சுகாதார நிறுவனங்களுக்கு இடையே வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளித்தல் போன்றவை இவர்களில் பிரதான பணிகளாக அமையும்.

மேலும், அமைச்சின் கொள்கைகளுக்கு அமைவாக பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்தல், முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய திட்டங்களைப் பரிந்துரைத்தல் மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களைக் கண்காணித்து அவற்றை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற பொறுப்புகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.




Post a Comment

Recent News

Recent Posts Widget