Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவைக்கு 2014ஆம் ஆண்டில் 6 எயார்பஸ் விமானங்களையும், 2017ஆம் ஆண்டில் 07 எயார்பஸ் விமானங்களையும் கொள்வனவு செய்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காகவே குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எயார்பஸ் கொடுக்கல் - வாங்கலில் இலஞ்சமாக பெறப்பட்ட பணத்தில் 60 மில்லியன் ரூபாவை மஹிந்த ராஜபக்ஸவிடம் வழங்கியதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வெளிப்படுத்தியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சிவில் விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கும் பணம் வழங்கப்பட்டுள்ளமை கபில சந்திரசேனவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget