அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மற்றும் புதுச்சேரி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவை வழங்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முறையாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு ஆதரவளிப்பது கட்சியின் கடமை என்பதால், முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையானது தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதுடன் நின்றுவிடாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கும், தந்தை பெரியாரின் சமூக நீதி மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு இலட்சியங்களை நிலைநிறுத்துவதற்கும் இந்த கூட்டணி பாடுபடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment