Ads (728x90)

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். 

ஏர்பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் மூன்று நெருங்கிய உறவினர்களின் தலா 100 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதவான் அசங்க எஸ். போதரகம கடந்த 5ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். 

இதன்படி, நேற்று பிணைப் பணத்தைச் செலுத்துவதற்காக மூவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் கேசல்கவத்தை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தாங்கள் கபில சந்திரசேனவை யாரென்று அறியோம் என்றும், 15,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டே பிணையாளர்களாக முன்னிலைப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அத்துடன், அவர்களுக்கு நிரந்தரத் தொழில் அல்லது வருமான வழி எதுவுமில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள சாஞ்சிஆராச்சி வத்தை பகுதியைச் சேர்ந்த அந்த இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், இவர்கள் பிணைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget