Ads (728x90)

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையிலான விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்துக் கண்டறியும் நோக்கில், அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முழுமையாகத் தடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மகாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இதுவரை எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள வணிக மதிப்புமிக்க காணிகளை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த காணிகள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக முறையான திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அதிகூடிய தொகையான 22,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீதிகள், நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, ஒதுக்கப்பட்டுள்ள நிதியை 2026 ஆம் நிதி ஆண்டுக்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி, மக்களுக்கு விரைவாகப் பலன்களைப் பெற்றுக்கொடுப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget