மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையானது ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தபோதிலும், அதனையும் முகாமைத்துவம் செய்துகொள்ளக்கூடிய சக்தி அரசாங்கத்திடம் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வில் நேற்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முழுமையாக தடைப்பட்டது.பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இதன் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக, மக்களுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி ஒதுக்குவதற்கு முடிந்துள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், இனவாதத்திற்கு மீண்டும் இடமளிக்காதிருத்தல், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குதல், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாடொன்றைக் கட்டியெழுப்புதல் மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற வரப்பிரசாதங்களை ஒழித்தல் ஆகியவையே, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். அதேபோல், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ரத்து செய்து, அரசியல்வாதிகளைப் பொதுமக்களுக்காக பணியாற்றுபவர்களாக மாற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.




Post a Comment