நுவரெலியா மாவட்டத்தில் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முற்பகல் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
மீள்குடியேற்றம் மற்றும் காணி அடையாளங்காணும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலக மட்ட ரீதியாக தனித்தனியாகக் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
டித்வா புயல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா, நோர்வூட், நில்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, தலவாக்கலை, வலப்பனை, மதுரட்ட, ஹங்குரங்கெத்த மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய 10 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 18,266 குடும்பங்களைச் சேர்ந்த 61,833 நபர்கள் பாதிக்கப்பட்டதுடன், இதில் தோட்டப்பகுதிகளில் 675 வீடுகளும், கிராமப்புறங்களில் 1,565 வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன.தோட்டப்பகுதிகளில் 612 வீடுகளும் கிராமப்புறங்களில் 153 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்தன. அத்துடன் 93 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் தோட்ட மக்கள், தற்போதுள்ள மழைக்காலத்துடன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அதற்கான காணி ஒதுக்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்துமாறும், அந்தக் காணிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படும் வரை, அவ்விடத்திலேயே தற்காலிக வீடொன்றை விரைவாக அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
அண்மைய காலத்தில் ஏற்பட்ட மிகப்பாரிய பேரழிவான டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் காணப்பட்ட போதிலும், முறையான திட்டமிடல் மற்றும் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாக அவற்றைத் வெற்றிகரமாகக் கடந்து, முதற்கட்டப் பணிகளில் கணிசமான பகுதியை முடிக்க முடிந்ததாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, அதன் பலன்களை விரைவாக மக்களுக்கு வழங்க அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.



Post a Comment