இதன்போது இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே Vietnam Airlines மற்றும் VietJet Air ஆகிய விமான நிறுவனங்களின் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதான ஒத்துழைப்புத் துறைகளுக்கான 06 முக்கிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடலும் இடம்பெற்றன.
வியட்நாம் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மன்றம், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாமின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணையாக, அவரினதும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினதும் பங்கேற்புடன் நடைபெற்றது.இந்த மன்றத்தில், முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை உள்ளடக்கிய ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அத்துடன், இலங்கை வர்த்தக சபையின் கீழ் இலங்கை - வியட்நாம் வர்த்தக சம்மேளனம் நிறுவப்பட்டமை இங்கு இடம்பெற்ற ஒரு சிறப்பம்சமாகும்.இந்த மன்றத்திற்கு இணையாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வர்த்தக வலையமைப்பு அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கை மற்றும் வியட்நாம் வர்த்தகர்களுக்கு இடையில் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இரு நாடுகளினதும் தனியார் துறையினரிடமிருந்து இதற்குச் சிறந்த வரவேற்பு கிடைத்ததோடு, வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவது குறித்து வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.




Post a Comment