Ads (728x90)

அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத 18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்காக ”சுரக்கும” ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. 

”சுரக்கும” ஓய்வூதியத் திட்ட உறுப்பினர்களின் தேவை மற்றும் பங்களிப்புப் பணத்தைச் செலுத்தும் திறனின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான ஓய்வூதியத் தொகையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்றும் சபை தெரிவித்துள்ளது. 

உறுப்பினர்கள் 60 வயதைப் பூர்த்தி செய்தவுடன் வாழ்நாள் முழுவதற்குமான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், மேலும் பல சமூகப் பாதுகாப்பு நன்மைகளும் இதன்கீழ் கிடைக்கவுள்ளன.

தவணைக்கட்டணங்களைச் செலுத்தத் தவறினாலும், கணக்கின் மீதமுள்ள தொகைக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். 

ஓய்வூதியம் பெறுபவர் மரணமடைந்தால், அவரது துணைவருக்கு அல்லது சார்புடையவருக்கு அந்த உறுப்பினரின் 80 வயது வரையிலான காலப்பகுதிக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னர் மரணம் சம்பவித்தால், இறுதிச்சடங்கு செலவுகளுக்காக 100,000 ரூபாவுடன், அவரது துணைவருக்கு ஓய்வூதிய உரிமை அல்லது செலுத்தப்பட்ட தொகையை முதலீட்டு வருவாயுடன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

விபத்து அல்லது நோய் காரணமாக முழுமையான ஊனமுறும் உறுப்பினர்களுக்கு 500,000 ரூபா பணிக்கொடையுடன், ஊனம் ஏற்பட்ட நாள் முதல் ஆயுட்காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், உறுப்பினர் எதிர்கால தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவார். 

அதேபோல், நிரந்தர பகுதி ஊனத்தின் போது 100,000 ரூபா பணிக்கொடை வழங்கப்படும் என்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. அத்துடன், பயனாளியின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அல்லது ஏதேனும் தேவைகளுக்கான நிதி உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும். 

இதற்கமைய, 18 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்தம், வருடாந்தம் அல்லது ஒரே தடவையில் செலுத்தும் தொகையாகத் தேவைக்கு ஏற்ப இச்சலுகைகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2 88 60 88 என்ற தொலைபேசி இலக்கம் மூலமும், 077 1 44 30 44 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.


 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget