இத்திட்டத்தின் மிக முக்கிய விசேட அம்சம் என்னவெனில், எவ்வித வெளிநாட்டுக் கடன்களையும் பெறாமல் முற்றிலும் உள்நாட்டு அரச நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிதியுதவிகள் மூலம் மட்டுமே இதற்கான செலவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஜப்பானிய நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் இரண்டாவது முனையத்தின் (Terminal 2) பணிகள் நிறைவடைய இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் என்பதால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுலாத்துறையின் எழுச்சிக்கு முகங்கொடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் உடனடி நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே தனியார் துறையின் பங்களிப்புடன் தற்காலிக விசேட கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் மேலதிகமாக 14 செக்-இன் கவுண்டர்கள் (Check-in counters) நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் தினசரி 10 முதல் 20 வரையான மேலதிக விமானப் பயணங்களைக் கையாளும் திறன் கிடைத்துள்ளது.
இந்த நிரந்தர நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், பயணிகள் புறப்படும் பிரதான மண்டபத்தை விரிவுபடுத்துதல், பாதுகாப்பு மற்றும் குடிவரவு குடியகல்வு கவுண்டர்களில் உள்ள நீண்ட வரிசைகளை இல்லாதொழித்தல், பயணிகள் வருகை தரும் பகுதியை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் சாமான்களைக் கையாளும் அமைப்புகளை நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நவீனமயமாக்கலின் மூலம் முதலாவது முனையத்தின் வருடாந்த பயணியர் கொள்ளளவு 6 மில்லியனில் இருந்து 10 மில்லியன் வரை உயர்வடையும் என்பதுடன், இது இலங்கையை பிராந்தியத்தின் முக்கிய விமான சேவை மையமாக நிலைநிறுத்த பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment