யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில், அறிவு, பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உலகம் நினைவுகூர்கின்றது.
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில், ஆசியாவின் மிகப் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
அங்கிருந்த சுமார் 97,000 இற்கும் அதிகமான அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், வரலாற்றுச் சான்றுகள், பழமையான கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட தமிழர் அறிவுப் பாரம்பரியத்தின் பெறுமதிமிக்க பொக்கிஷங்கள் அந்தத் தீயில் எரிந்து சாம்பலாகின.
அந்த இரவு எரிந்தது ஒரு கட்டிடம் மட்டுமல்ல, ஒரு இனத்தின் அறிவுச் செல்வமும், பண்பாட்டு நினைவுகளும் மற்றும் வரலாற்று அடையாளங்களுமாகும்.45 ஆண்டுகள் கடந்த போதிலும், அந்தத் துயரச் சம்பவத்தின் நினைவுகள் இன்றும் தமிழர் மனங்களில் அழியாத வடுக்களாகத் தொடர்கின்றன.
அறிவுக்கான தாகத்தையும், ஒரு மக்களின் நினைவுகளையும் அழிக்க முடியாது என்பதற்கு யாழ்ப்பாணம் பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக எழுந்து நிற்பது சாட்சியாக உள்ளது.
Post a Comment