யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணியாளர்கள் மிகவும் சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக பாராட்டிய அமைச்சர், காணாமல் போனவர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல என்றும், அவர்களது குடும்பங்கள் நீண்டகால மனவேதனையுடனும், எதிர்பார்ப்புடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 2,452 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளது. ஒரு குடும்பத்தில் இருவர் அல்லது மூவர் வரை காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இழந்து துயரத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உடல் காயங்களுக்கு மருந்து வழங்க முடியும். ஆனால் மனக் காயங்களுக்கு உண்மையான மருந்து அன்பும், நீதியும் மட்டுமே. காணாமல் போனோரின் உறவினர்களின் வேதனையை பணத்தால் ஈடுசெய்ய முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மக்கள் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மையுடன் வாழ்ந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதுடன், மீள்குடியேறிய மக்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தை ஒரு முக்கிய அபிவிருத்தி மையமாக மாற்றும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இன வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒரே நாட்டின் மக்களாக வாழக்கூடிய உண்மையான நல்லிணக்கச் சமூகத்தை உருவாக்குவதே இலக்காக இருப்பதாகவும் தெரிவித்தார்.
.jpeg)
Post a Comment