Ads (728x90)

புதிய ”சசகாவா” ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

நிகழ்வின்போது, சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் நினைவுப் பலகையை பிரதமர் திரைநீக்கம் செய்துவைத்தார். 

இதனைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹேய் சசகாவா ஆகியோரின் முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சிற்கும் சசகாவா அமைதி அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

"சசகாவா" ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார நிலையம் கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், கல்வி, தொழில்சார் பயிற்சி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய மையமாகச் செயற்படும் வகையில் இந்நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு நீண்டகால கலாசார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளால் செழுமை அடைந்திருக்கின்றது. இயற்கை, கலாசாரம், கல்வி மற்றும் சமூக விழுமியங்களை மதிப்பதில் இரு நாட்டு மக்களும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றனர்.

ஜப்பானிய மொழிக் கல்வியை மேம்படுத்துவதிலும், இலங்கை-ஜப்பான் மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும் சசகாவா நிலையம் ஆற்றி வரும் பணி அளப்பரியது. புதிய நிலையம் கலாசாரப் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பிற்கான ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது என பிரதமர் இந்நிகழ்வில் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget