கைது செய்யப்பட்டவர் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தாதியர் பயிற்சி பெற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஆவார். தனது கல்விச் செலவிற்காக 12,500 கனேடிய டொலர்களும், வெளிநாட்டுச் சுற்றுலா ஒன்றும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில், குறித்த பல்கலைக்கழகத்தின் சாரதி ஒருவரே இந்த போதைப்பொருள் தொகையை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
சந்தேகநபரான மாணவி, கனடாவின் ரொறன்ரோ நகரிலிருந்து போதைப்பொருளுடன் துபாய் வழியாக, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் நடைமுறையில் உள்ள 'மீட் அண்ட் கிரீட்' (Meet and Greet) எனும் விசேட வசதியைப் பயன்படுத்தி, தனது பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டு, எவ்விதப் பொருட்களையும் பிரகடனப்படுத்தாத 'பச்சை வழி' (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளைச் சோதனையிட்டதில், 140 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ 265 கிராம் நிறையுடைய 'ஹஷிஷ்' போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, குறித்த மாணவியும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Post a Comment