இது தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்களை கனடா பொலிஸார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். இவர், கனடாவில் ஏயார் கனடா (Air Canada) நிறுவனத்தில் பணியாற்றியவர்
ஜியோஃப்ரி வோல் எனும் இந்த விமானி, 2009 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 900 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கியுள்ளார். அவர் ஒருபோதும் முறையான உரிமத்தைப் பெறவோ அல்லது கட்டாயத் தேர்வுகளை முடிக்கவோ இல்லை எனத் தற்போதைய விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஒன்ராறியோவில் செய்தியாளர்களிடம் பேசிய பீல் பிராந்திய பொலிஸ் பிரதித் தலைவர் மிலினோவிச், “இந்த விசாரணையின் விவரங்கள் ஒரு திரைப்படக் கதையைப் போலவே இருக்கின்றன”என்றார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக போயிங் 767, 777 மற்றும் 787 போன்ற பெரிய ரக விமானங்களுக்குத் தலைமை விமானியாகப் பணியாற்றிய வோல், சுமார் 3 மில்லியன் கனடிய டொலர்களை ஊதியமாகப் பெற்றுள்ளார்.
வோல் தனது 27 ஆண்டு கால தொழில் வாழ்க்கையில் வணிக ரீதியான விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்தார். ஆனால், 2009 ஆம் ஆண்டு தலைமை விமானியாக (Captain) பதவி உயர்வு பெற்றபோது, அதற்குத் தேவையான “ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் பைலட் லைசென்ஸ்“ (ATPL-A) அவரிடம் இருக்கவில்லை. “குடும்ப மருத்துவத்தில் உரிமம் பெற்ற ஒருவர், உரிய தகுதியின்றி மூளை அறுவை சிகிச்சை செய்வது போன்றது இது”என்று பொலிஸ் அதிகாரி மிலினோவிச் வர்ணித்தார்.
2025 ஆம் ஆண்டில் வோலின் தகுதிகள் குறித்து நடத்தப்பட்ட வழக்கமான ஆய்வின்போது, அவரது ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏயார் கனடா நிறுவனம் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தது. 2026 ஜனவரியில் ‘புராஜெக்ட் ஐகாரஸ்’என்ற பெயரில் விசாரணைகள் தொடங்கப்படுவதற்கு முன்பே, அவர் பணி ஓய்வு பெற்றிருந்தார்.
கனடா போக்குவரத்துத் துறையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள ஜியோஃப்ரி வோல் மீது, 5,000 டொலருக்கும் அதிகமான மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் போலியான முத்திரைகளை வைத்திருத்தல் உள்ளிட்ட ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் 2026 ஜூன் 29, அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
.jpeg)
Post a Comment