Ads (728x90)

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. 

இக்காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஜனவரி - ஜூன் அரச நிதி ஆய்வறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்த நிலையில், இம்முறை உபரி பதிவாவதற்கு அரசாங்க வருமானம் 27 சதவீதத்தால் அதிகரித்தமையும், அரசாங்கச் செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையும் பிரதான காரணங்களாகும் என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2026 இன் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 2,710.6 பில்லியன் ரூபா வரை, அதாவது 2.71 டிரில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 சதவீத வளர்ச்சியாகும்.

வருடாந்த வரி வருமான இலக்கு 4.91 டிரில்லியன் ரூபாவாகும் என்பதுடன், முதல் ஆறு மாதங்களில் அதில் 55.2 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளது.

இலங்கை சுங்கம் வரி வருமானத்தில் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், அவ்வமைப்பினால் 1,290 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 48 சதவீதமாகும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பு கிடைத்துள்ளதுடன், அதன் மூலம் 1,248 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 46 சதவீதமாகும்.

மதுவரித் திணைக்களம் 138 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், ஏனைய வருமான வழிகளிலிருந்து 35 பில்லியன் ரூபா திரட்டப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget