இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, இத்திட்டம் வெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம் என்றும் இங்கு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் அடுத்த வருடத்தில் மாத்திரம் 2000 கோடி ரூபாய் செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.1990 களின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதிகளில் பரவி வரும் சிறுநீரக நோய்க்கு சுத்தமான குடிநீர் இல்லாததே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிலையத்திற்கும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றிற்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.
இந்த திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.வரலாறு முழுவதும் நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் சுமார் 60% மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர் வசதி கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.



Post a Comment