தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கள சுகாதாரப் பிரிவாக 1926 ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டமையுடன் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. இது இன்று 362 க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளைக் கொண்ட பரந்த வலையமைப்பாக வளர்ந்துள்ளது.
இந்த வலையமைப்பில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் (MOH), குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் (PHM) மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட கள அதிகாரிகள் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி வருவதுடன், அவர்கள் சமூகத்துடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மக்களின் நம்பிக்கையை வென்று சுகாதார சேவையின் மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றனர்.
இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நூற்றாண்டு காலமாக நாட்டின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காகச் சிறந்த சேவையாற்றிய 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.மேலும், நூற்றாண்டு நினைவு மலர், இலங்கை சமூகச் சுகாதார சேவையின் எதிர்கால வழிகாட்டலை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை உள்ளிட்ட வெளியீடுகளும் ஜனாதிபதியினால் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பொதுச் சுகாதார சேவை என்பது பெருமைமிக்க வரலாறு, நம்பகமான நிகழ்காலம் மற்றும் தெளிவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு துறை எனச் சுட்டிக்காட்டினார்.
தாய்மார்களின் ஆரோக்கியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் காரணமாக தாய்மார்களின் மரண எண்ணிக்கையை 2,500 இலிருந்து 25 என்ற குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவர முடிந்துள்ளதாகவும், 1,000 பிறப்புகளுக்கு 200 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை 05-06 வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.அத்துடன் மலேரியா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்த ஒரு நாட்டில், அந்நோயை முற்றிலும் ஒழிக்க முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நமது நாடு சமூகச் சுகாதார சேவையில் எவ்வளவு சாதனைகளைப் படைத்துள்ளது என்பதைக் காட்ட இச்சாதனைகளே போதுமானது எனக் கூறிய அமைச்சர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடு சமூகச் சுகாதார சேவையை எவ்வளவு தரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு நமது நாட்டிற்கே உரிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.



Post a Comment