இக்கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னணி மற்றும் தமிழ், முஸ்லிம் கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் சுயரூபம் குறித்து அவர் முழுமையான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த நாற்பது வருடங்களாக, முஸ்லிம் அரசியல் என்பது தன்னைத் தமிழ் அரசியலில் இருந்து இயல்பாகவே பிரித்துக்கொண்டது. தனி அடையாளம், தனி வாக்கு வங்கி, தனி பேரம் பேசும் சக்தி என்ற பாதையிலேயே அது பயணித்தது. குறிப்பாக, கிழக்கின் நிலப் பிரச்சினைகளிலும், வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்திலும் இரு தரப்பும் எப்போதும் எதிர் எதிர் திசையில்தான் நின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்காமல், இன்று திடீரென ‘கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி’என்ற பெயரில் உதயமாகியிருக்கும் இவர்களை ஒன்று சேர்த்தது மக்களின் நலனோ அல்லது கொள்கையோ அல்ல. மாறாக, அவர்களின் அரசியல் இருப்புப் பற்றிய பயம். நாடாளுமன்றத்தில் ‘கிங்மேக்கர்’ என்ற தகுதியும், பதவியும் பறிபோய்விட்டதே என்ற கலக்கம் மற்றும் வாக்கு வங்கி கரைந்து போனதன் விளைவாக வந்த அச்சமே இதற்குக் காரணம் என அவர் சாடியுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்காக அன்றி, தங்களின் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்தச் சுயநலக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. “பரஸ்பர அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதான உடன்படிக்கை” என்ற ஒரேயொரு வெற்று வாசகத்தை மட்டுமே அவர்களால் முன்வைக்க முடிந்திருக்கிறது. ஆனால், அந்த பரஸ்பர அக்கறையுள்ள விடயங்கள் எவை என்பதற்கான எந்தவொரு பட்டியலோ, பொது வேலைத்திட்டமோ அல்லது கொள்கை ஆவணமோ அவர்களிடம் இல்லை. கிழக்கின் எதிர்காலம் அல்லது நிலப் பிரச்சினை பற்றி ஒரு வரிகூட அவர்கள் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதான் இந்த வெங்காயக் கூட்டணியின் உரிக்கப்பட்ட முதல் தோல் எனக் குறிப்பிட்ட கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன், கொள்கையற்ற இந்தக் கூட்டணி வெங்காயம் மட்டுமல்ல, அது ஒரு நீர்க்குமிழி என்றும், வரவிருக்கும் முதல் தேர்தல் ஆசனப் பங்கீட்டிலேயே இந்த உடன்பாடு உடைந்து சிதறிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Post a Comment