Ads (728x90)

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். வளமான கலாசாரம், அழகான இயற்கை நிலப்பரப்புகள், சிறந்த விருந்தோம்பல் மற்றும் மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கையை நாங்கள் அறிகிறோம் என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வோர்த் தெரிவித்துள்ளார்.

ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் ஹேலீஸ் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல, அவுஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் துடிப்பான இலங்கை புலம்பெயர் சமூகத்தினர் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். இலட்சக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் இலங்கையுடனான தமது பரம்பரைத் தொடர்பைக் கொண்டுள்ளனர். ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் இந்த புதிய கொழும்பு – மெல்பேர்ண் நேரடி விமான சேவை, அந்த குடும்பங்களையும், சமூகங்களையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர உதவும்.

அவுஸ்திரேலியாவுடனான நேரடி வான்வழி இணைப்பு வெறும் ஒரு வர்த்தகச் சேவை என்பதையும் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ள நிலையில், பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவை நல்ல பங்காளியாகவும் முன்னிலைப்படுத்த இந்த இணைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget