Ads (728x90)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி தலைமை நீதியரசரை இலக்காகக் கொண்டு சில தரப்பினரால் முன்வைக்கப்படும் அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வன்மையாகக் கண்டிப்பதாக ‘மக்கள் ஆணைக்கான சட்டத்தரணிகள்’அமைப்பு தெரிவித்துள்ளது.

புறகோட்டை சோலிஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அமைப்பின் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் வீரக்கோன் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், நீதித்துறையின் உயர்மட்ட பதவியை வகிக்கும் தலைமை நீதியரசரை இலக்காகக் கொண்டு பொறுப்பற்ற கருத்துகள் முன்வைக்கப்படுவது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் செயல்திறனை அதிகரிப்பதற்கும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் பல கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் நீதித்துறை செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தக்கூடியவையாகும். 

இவ்வாறான விரிவான நீதித்துறை மறுசீரமைப்புத் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நீதித்துறையின் உயர்பதவியை வகிக்கும் ஒருவரை இலக்காகக் கொண்டு பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். 

கருத்து வெளியிடுவதற்கும், நீதித்துறையை விமர்சிப்பதற்கும் ஜனநாயக உரிமை இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், உண்மைக்கு புறம்பான பிரசாரங்களிலிருந்து நீதித்துறையை பாதுகாப்பது சட்டத்தரணிகள் சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என ‘மக்கள் ஆணைக்கான சட்டத்தரணிகள்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget