இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஆகியோர் இணைந்து, மாதிரி கிராமத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்திய அரசாங்கத்தின் மானிய நிதியுதவியுடன், இலங்கையின் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட வீடமைப்புக் குழுக்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 24 வீடுகளைக் கொண்ட ஒரு மாதிரி கிராமம் அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய 20 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் பணிகள் தற்போது சுமார் 98.5 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள நான்கு மாதிரி கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

Post a Comment