புகையிரதப் பொது முகாமையாளரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று முன்தினம் 16ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர ஜயசேகரவிற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது பற்றி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தகவல் திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 'pravesha' அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தை 0112512017 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment