நாட்டின் பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட மக்கள் ஓய்வுபெற்ற பின்னரும், முதிய வயதிலும் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் சுகாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் முதன்மை தலையீட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இலங்கை அரச தோட்டக் கூட்டுத்தாபனத்தின் 3,000 ஊழியர்களுக்கு 1,961 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையும், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் 6,123 ஊழியர்களுக்கு 2,024 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையும், எல்கடுவ தோட்ட நிறுவனத்தின் 1,000 ஊழியர்களுக்கு 503 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையுமாக 4,500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, குறிப்பாக மலையகத் தோட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிலுவை பணிக்கொடை கொடுப்பனவுகளை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று 10 ஆம் திகதி கண்டி மாவட்ட செயலகத்தில் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சர் அணில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
Post a Comment