இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் வலுவான மீட்சியை வெளிப்படுத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், தொடர்ந்து 11 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.
எனினும், மத்திய கிழக்குப் போரின் கால அளவு மற்றும் தீவிரம் குறித்த நிச்சயமற்ற நிலை, உலகளாவிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் எல் நினோவின் தாக்கம் உள்ளிட்ட காரணிகளால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எதிர்மறையான அபாயங்கள் தொடர்வதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விலை அதிர்ச்சியின் காரணமாக இலங்கையின் பணவீக்கம் எட்டு சதவீதமாக அதிகரித்துள்ள போதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
வங்கிகள் போதுமான மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், இலாபகரமாகவும் இயங்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடுத்தர கால மூலோபாயத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது, வரி வசூல் முறையை மேம்படுத்துவது, வரி அடித்தளத்தை விரிவுபடுத்துவது மற்றும் வரி விலக்குகள் மற்றும் சலுகைகளை மறுசீரமைப்பது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரச நிறுவனங்களால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்களைக் குறைப்பதற்காக எரிசக்தி விலையை செலவு மீட்பு அடிப்படையில் தொடர்ந்து பேணுவது முக்கியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியக் குழு யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து வடக்கு மாகாணத்தின் பொருளாதார ஆற்றல் குறித்து ஆராய்ந்துள்ளது.
.jpeg)
Post a Comment