Ads (728x90)

மக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

சுகாதாரத் துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

அதற்கமைய, பொதுமக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரச் சேவை மேலும் நெருக்கமாக்கப்படுவதுடன், உலகளவில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் முறைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான நிதி எதிர்வரும் ஆண்டில் ஒதுக்கப்படவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, அடுத்த ஆண்டுக்குள் 16 இடங்களில் 'கெத் லெப்' (Cath Lab) வசதிகள் ஆரம்பிக்கப்படும். மேலும், இதய நோய் சத்திர சிகிச்சைகளுக்காக காணப்பட்ட 1 முதல் 2 வருட காலக் காத்திருப்புப் பட்டியல், குறுகிய காலத்திற்குள் 15 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் நிறைவடையும்போது அரச சேவைக்கு 121,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பல ஆண்டுகளாக அரச சேவைக்குப் புதிய பணியாளர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. 

எனினும், எமது அரசாங்கம் தன்னிச்சையாக ஆட்களைச் சேர்ப்பதில்லை. இது தொடர்பில் ஆராயப் பிரதமர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமித்து, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தேவையான உண்மையான ஆளணிப் பற்றாக்குறையை முறையாகக் கண்டறிந்துள்ளோம்.

இதற்கமைய, இந்த வருடம் இறுதியில் காவல்துறையில் 10,000 பேரும், ஆசிரியர் சேவைக்கு 23,000 பேரும் அடங்கலாக மொத்தமாக 121,000 பேர் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget