Ads (728x90)

வட மாகாணத்தில் சுகாதார நியமனங்களை வழங்கும்போது தாதியர் சேவைக்கு எதிர்பார்த்த அளவில் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கீழும், வடமாகாண சபையின் கீழும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 350 சுகாதாரப் பணியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் காங்கேசன்துறையில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக அனைத்து சுகாதார ஊழியர்களும் அரச சேவையைத் தாண்டிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதனை ஒரு தொழிலாக மட்டுமன்றி, பெரும் பொறுப்பாகக் கருதி கடமையாற்ற வேண்டும். சுகாதார உதவியாளர் பணிக்காக வட மாகாணத்தில் இருந்து 4,219 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவர்களுள் 3,595 பேர் அடிப்படைத் தகுதிகளைக் கொண்டிருந்தனர். 

அவர்களிலிருந்து அதிக புள்ளிகளைப் பெற்ற 350 பேரே இன்று நியமனங்களைப் பெற்றுள்ளனர். இவை எவ்வித அரசியல் நியமனங்களும் அல்ல. அவ்வாறு குற்றஞ்சாட்டவும் முடியாது. மத்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக, முதன்முறையாகச் சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனங்களை வட மாகாணமே வழங்கியுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்தே ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரச் சேவையின் அனைத்துப் பிரிவுகளுக்குமான ஆட்சேர்ப்பு, பயிற்சித் திட்டங்கள் என்பன உரிய முறையில் விரைவுபடுத்தப்படும்.  வட மாகாண வைத்தியசாலைகளில் உள்ள ஏனைய வெற்றிடங்களுக்கும் விரைவில் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் தன்னார்வலர்களாக பணியாற்றிய 98 பேர் கொண்ட குழுவில் கணிசமானோருக்கு இன்று நியமனங்கள் கிடைத்துள்ளன. இன்னும் 15 பேர் கொண்ட குழுவினர் எஞ்சியுள்ளதாக அறியமுடிகிறது. அப்பிரிவினரும்  அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்திருப்பின், அவர்களையும் அரச சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தயார் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget