Ads (728x90)

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ”நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி” விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் பற்றிப் பேசிய ஜனாதிபதி, இப்போது வந்து அழுவதை விட்டுவிட்டு, திருட வேண்டாம் என்று அன்றே தந்தை, மகனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் சாதாரணமானதொன்றல்ல, குடும்ப ஆட்சி முறைமையை தோற்கடித்து மக்கள் தமக்கான அரசாங்கத்தையே 2024 ஆம் ஆண்டு தெரிவு செய்தார்கள். எனவே ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகவுள்ளார்கள்.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கான போராட்டத்தை விவசாயிகள் தான் ஆரம்பித்தார்கள். சேதன பசளைத் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இரவோடு இரவாக அமுல்படுத்தினார்கள். அதனால் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. அந்த பாதிப்பில் இருந்து தான் தற்போது மீண்டு வருகிறோம்.

பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். பொருளாதார மீட்சிக்கான பணிகளை முன்னெடுத்துக் கொண்டு, வெளிநாட்டு அரசமுறை கடன்களை திருப்பிச் செலுத்திக் கொண்டு தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். 

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. அதனால் தான் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.

பூகோள மட்டத்தில் நெருக்கடிகள் ஏற்படும் போது எதிர்க்கட்சியினர் அதனை தமது அரசியல் இலாபத்துக்காகவே பயன்படுத்திக் கொண்டார்கள். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், உணவு தட்டுப்பாடு ஏற்படும், மின்விநியோகம் துண்டிக்கப்படும் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதால் அவர்களின் எதிர்பார்ப்பு வெற்றிப்பெறவில்லை.

விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகிறது என்பதை அறிவேன். அவற்றுக்கு கட்டம் கட்டமாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். நெல்லுக்கான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களால் தான் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆகவே மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன்.

குடும்ப நலனுக்காக கடந்த காலங்களில் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் கூட்டாக அரச நிதியை கொள்ளையடித்தார்கள். இன்று அவர்கள் வழக்கு விசாரணைக்காக வரிசையில் நிற்கிறார்கள். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புக்காக நிதி ஒதுக்கப்படும். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றும் 13,500 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தான் வாழ்கிறார்கள்.

2027 ஆம் ஆண்டு 6,500 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படும், 2028 ஆம் ஆண்டு 6,500 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படும்.  வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல மாகாணங்களில் நிலவும் வீடமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

ஊழலுக்கு எதிராகவும், பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். இதுதான் இவர்களின் உண்மையான முகம் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு எவருக்கும் மன்னிப்பு கிடையாது. நிச்சயம் தண்டனை கிடைக்கும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்கள் இன்று ஊடக சுதந்திரம், ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்.

எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அவ்வாறு பழிவாங்குவதாயின் பதவிக்கு வந்தவுடன் அவ்வாறு செய்திருப்பேன். கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட பல வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக முறையாக விசாரிக்கப்பட்டது. தற்போது கைது நடைபெறுகிறது. நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பேரணியை விமர்சித்த ஜனாதிபதி, "ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்" எனவும் குறிப்பிட்டார்.

அனுராதபுரப் பேரணியானது மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அதனை நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget