Ads (728x90)

நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவித் திட்டத்தின்படி, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2027ஆம் ஆண்டுக்கான "முடிவு சார்ந்த திட்ட மேம்பாட்டு" நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தலைமையில் இன்று தம்புள்ளையில் நடைபெற்றது.

இந்த மொத்தக் கடன் திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையும், 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

2027ஆம் ஆண்டில் ஒரு மாகாணத்துக்கு 750 மில்லியன் ரூபா மொத்தத் தொகையுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலதனமாக 6.7 பில்லியன் ரூபா பெறப்படவுள்ளதுடன், அது தொடர்பான 2027ஆம் ஆண்டுக்கான திட்டங்களைத் தயாரித்து நவம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிதி ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும்.

அதற்கமைய, 2027 ஜனவரி மாதம் முதல் மாகாணங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நிதியைத் திறம்படப் பயன்படுத்துவதையும், குறிப்பிட்ட இலக்குகளை அடைவதையும் உறுதி செய்வதற்காக, 9 மாகாணங்களின் பிரதான செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளை இணைத்துக்கொண்டு நிதி ஆணைக்குழுவினால் வருடாந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்படும்.

இதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சகத்திடம் கையளிக்கப்பட்டுள்தாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுத் தலைவர் டைலின் சென், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட பொதுச் சுகாதார விசேட ஆலோசகரான வைத்தியர் குமாரி வினோதினி நவரத்ன மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget