இந்நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் நடைபெற்றது.
புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நடுகை செய்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் நினைவுப் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
மன்னார் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவி 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.இத்திட்டம் நமது நாட்டின் இலவச சுகாதார சேவையைப் பிரதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகப் அமைவதை பாராட்டிய ஜனாதிபதி, இதற்குப் பங்களிப்பு வழங்கிய இந்தியப் பிரதமர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்திற்கும், ஏனைய அனைத்துத் தரப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லாமல் திடீர் விபத்துச் சிகிச்சைகள் மற்றும் ஏனைய விசேட சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ள இதனால் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 09.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டதுடன், மத்திய சுகாதார அமைச்சுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.11.2025 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடம் 77.3 மீற்றர் நீளமும் 34.3 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையவுள்ளது. தரைத்தளம் மற்றும் மேல்தளம் என இரு மட்டங்களைக் கொண்ட இக்கட்டடத்தின் ஒவ்வொரு தளத்தினதும் பரப்பளவு 2,651.4 சதுர மீற்றர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் மொத்தம் 248 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி. ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், நகர சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்தியசாலையின் அத்தியட்சகர், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment