Ads (728x90)

2030ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதும், டிஜிட்டல் ஏற்றுமதியை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதும், அதேபோன்று 200,000 பேரைக் கொண்ட டிஜிட்டல் தொழிற்படையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

"டிஜிட்டல் யுகத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புதல்" (Nation Building in the Digital Age) எனும் தலைப்பில் நடைபெற்ற 26வது இலங்கைப் பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புத்தாக்கங்களையும் உருவாக்கும் நாடாக இலங்கையை உருமாற்றுவதற்கு அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்த ஏற்றுமதி 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களை நவீனமயப்படுத்துவதிலும் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிறுவனக் கட்டமைப்பின் ஊடாக, அடிப்படை டிஜிட்டல் மாற்ற முயற்சிகளுக்காக அரசாங்கம் சுமார் ரூபா 30 பில்லியனை ஒதுக்குவதற்கு உறுதியளித்துள்ளது.

300 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், ரூபா 6 பில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகளைச் செயலாக்கியுள்ள GovPay தளத்தை அவர் ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டார். 

டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு அரசாங்கப் பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிர்வாகச் சுமைகளைக் குறைக்கவும் முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

சுகாதாரம், விவசாயம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வகிக்கும் பங்கையும் பிரதமர் விளக்கினார்.

டிஜிட்டல் சுகாதார முறைமைகள் மற்றும் தொலைமருத்துவம் மூலம் சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்துதல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட விவசாய நடைமுறைகள் மூலம் உற்பத்தித்திறனையும் நீர் முகாமைத்துவத்தையும் வலுப்படுத்துதல், அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்காக நுண்ணறிவுக் கட்டமைப்புகளையும் டிஜிட்டல் எரிசக்தி முகாமைத்துவ முறைமைகளையும் பயன்படுத்துதல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைமைகள், நிகழ்நேர வாகனத் தொகுதிக் கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவுப் போக்குவரத்து முகாமைத்துவம் ஆகியவை போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதுடன், பயணிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமங்களையும் குறைக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

மாறிவரும் தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், நடைமுறைப் பயிற்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் நுண் திறன் சான்றிதழ்கள் உள்ளிட்ட நெகிழ்வான தகைமைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

தொழில்நுட்பத்தால் மாத்திரம் சமத்துவமின்மையை ஒழிக்க முடியாது என்றும், டிஜிட்டல் கொள்கைகள் குடிமக்களை மையமாகக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget