இதன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் நாளிலிருந்து சுமார் 30 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னர் இடைநிறுத்தப்பட்ட இத்திட்டம், இலங்கை ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்து மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) மற்றும் ஜப்பான் அரசாங்கம் தேவையான கடன் உதவிகளை வழங்க உறுதிளித்துள்ளன. 2ஆம் முனையத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன், கூடுதலாக ஆண்டுக்கு 9 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் விமான நிலையத்திற்குக் கிடைக்கும்.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் 2020 டிசம்பர் 15 அன்று ஆரம்பிக்கப்பட்டன. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சலுகைக் கடன் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்காக, மதிப்பிடப்பட்ட மொத்த முதலீடு 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2020இல் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், 2022 டிசம்பர் மாதத்தில் திடீரென முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாத நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
2024 செப்டம்பரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசு மற்றும் JICA நிறுவனத்துடன் தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. 2026இல் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து, நிறுத்தப்பட்டிருந்த சலுகைக் கடன்களை மீண்டும் வழங்க ஜப்பான் ஒப்புக்கொண்டதுடன், பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க தைசே நிறுவனத்தையே மீண்டும் பயன்படுத்தவும் JICA அனுமதி அளித்துள்ளது.
2026 நவம்பருக்குள் கட்டுமானங்கள் மீண்டும் தொடங்கும் நிலையில், 2029ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புதிய முனையத்தை முழுமையாக இயங்க வைப்பது இலக்காகும்.
இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடைவதன் மூலம் நாட்டிற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கவுள்ளன. தற்போதைய 1ஆம் முனையத்தால் ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாள முடியும் என்ற நிலையில், புதிய 2ஆம் முனையம் திறக்கப்படுவதன் மூலம் இக்கொள்ளளவு ஆண்டுக்கு 15 மில்லியன் ஆக உயரும். விமான தரிப்பிடங்கள் 23 சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பதுடன், பயணிகளுக்காக 16 புதிய பாலங்கள், நவீன பரிசோதனைக் கவுண்டர்கள், சொகுசு ஓய்வறைகள் மற்றும் சர்வதேச தரத்திலான வரியற்ற வர்த்தக வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன.

Post a Comment