அதற்கமைய, நகர்ப்புறப் பிரதான பாடசாலைகளுக்கும் கிராமப்புறப் பாடசாலைகளுக்கும் இடையில் நிலவும் வசதிகள், கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வைக் குறைத்து, சகல குழந்தைகளுக்கும் தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
309 ஆரம்பப் பாடசாலைகளை நவீனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட புத்தளம், மஹகும்புக்கடவல கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டடத்தை நேற்று மாணவர்களின் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் இப்பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.இவ்வேலைத்திட்டம் நிறைவடையும்போது, இத்தகைய வசதிகளைக் கொண்ட சுமார் 309 ஆரம்பப் பாடசாலைகளை நாட்டின் ஒவ்வொரு கோட்டத்திலும் உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகளைக் கொண்ட இக்கட்டடத்தில் ஸ்மார்ட் பலகைகள் (Smart Boards), செயற்பாட்டு அறைகள் (Activity Rooms), வாசிப்பு அறைகள் (Reading Rooms) மற்றும் சுகாதார வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்குச் சிறந்த குடிமக்கள் அவசியம். சிறந்த குடிமக்கள் தரமான கல்வியின் மூலமே உருவாக்கப்படுகின்றனர்.
அத்துடன், விசேட தேவையுடைய மாணவர்களும் இலகுவாக அணுகக்கூடிய வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளமையும் ஒரு சிறப்பம்சமாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசிரியரின் ஒரேயொரு வார்த்தையினால் குழந்தையின் எதிர்காலம் முழுமையாகத் தீர்மானிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்ட பிரதமர், எவ்வளவு பௌதிக வளங்களை வழங்கினாலும், வகுப்பறையில் ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையிலான தொடர்பும் ஆசிரியரின் பங்களிப்பும் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமானவை என வலியுறுத்தினார்.
பிரதமர் புதிய கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்குக் கையளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததுடன், புதிய கட்டடத்திற்கு முன்பாக நாவல் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.
Post a Comment